பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
04:07
பெண்மையின் சக்திக்கு அருள் கிடைக்கும் மாதம் ஆடி ஆகும். இம் மாதத்தில் சிவனின் சக்தியை விட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன் , ஆடி அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் அளித்துள்ளதாக ஐதீகம்.
இது தெய்வ வழிபாடு, பண்டிகைகள் துவக்க மாதமாக அமையும். நல்ல மழை பெய்ய வேண்டியும், நல்ல உடல்நலம், நோய் பரவாமல் இருக்க பண்டிகை கொண்டாடி அம்மனை வழிபடுவர். ஆடியில் விதைக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உண்டு. ஆடி மாதம் வரும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பெண்கள் விரதம் கடைபிடித்து அம்மனிடம் வேண்டுதல் வைப்பது வழக்கம்.
வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்கள் கணவர் ஆயுள் அதிகரிக்கவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் விரைவில் கூட வேண்டும் என வேண்டி கொள்வர். வேண்டுதல் நிறைவேற கோயில்களில் கூழ் ஊற்றி வழிபடுவர். ஆடியில் வரும் கார்த்திகை நட்சத்திரம் சிறப்பானது. பிரார்த்தனை நேர்த்திக்கடன் செலுத்த உகந்த நாள்.கோயில்களில் துர்கா பூஜை, ஆடி வெள்ளி, ஆடி கார்த்திகை, பிரதோஷ பூஜை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், அம்மனுக்கு வளையல் திருவிழா, வரலட்சுமி விரதம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படும்.
மழைக்காலம் துவக்கம்: தட்சிணாயனம் என்பது மழைக்காலத்தின் துவக்கத்தை குறிக்கிறது. வளத்தை தொடர்ந்து பண்டிகைகள், தெய்வ வழிபாடு நிகழ்சிகளுக்கு எல்லாம் ஆண்டின் துவக்க மாதம் ஆடியாகும். விவசாயம், தொழில், நெசவு போன்றவற்றில் பணியை துவக்குவர்.