பதிவு செய்த நாள்
01
ஆக
2019
12:08
நிலக்கோட்டை: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் வராததால் குறைந்த அளவிலான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். நிலக்கோட்டை, விளாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். திண்டுக்கல், வத்தலக்குண்டு, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயங்கின. அன்னதானம் வழங்கப்பட்டது.
* ஆத்துார் அருகே அக்கரைப்பட்டியில், மேற்கு தொடர்ச்சி மலைக்குன்றில் 200 அடி தொலைவில் சடையாண்டி சுவாமி குகைக்கோயில் உள்ளது. ஆடி அமாவாசையன்று நடைபெறும் விழாவிற்கு, தேனி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, நேற்று நடந்தது. வெளிமாவட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர்காவடி, பறவைக்காவடியுடன் உடலில் அலகு குத்தி வந்தனர். நுாற்றுக்கணக்கானோர் குடும்ப சகிதமாக வந்து, பொங்கல் வைத்தல், குழந்தைகளுக்கு காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், ஆத்துார் காசி விசுவநாதர் கோயில்களில் அமாவாசை சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.--
* சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* அம்பாத்துரை வீரபக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி பை-பாஸ் ரோடு சந்தனக்கருப்பணசுவாமி கோயிலில், விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
* திண்டுக்கல் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் புனித நீராடிய பலரும் தங்கள் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் விட்டு சிறப்பு பூஜைகளுடன் தர்ப்பணம் செய்தனர்.
பழநி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, பழநி சண்முக நதிக்கரையில் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி, எள்ளு உருண்டை, பச்சரிசி படையல் வைத்து, ஏராளமானோ வழிபாடு செய்தனர். பழநி பாலாறு -பொருந்தலாறு வீர ஆஞ்ச நேயர் கோயிலில் அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி புறப்பாடு நடந்தது. இதேப்போல பெரியாவுடையார்கோயில், கரடிக்கூட்டம் ஆஞ்சநேயர் கோயில், நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரமேஸ்வரர் கோயில் மற்றும் குலதெய்வ கோயில்களில் அபிேஷக வழிபாடுகள் நடந்தது. ஏராளான பக்தர்கள் பங்கேற்றனர்.