பதிவு செய்த நாள்
03
ஆக
2019
02:08
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அம்மன் கோவில்களில், ஆடி மூன்றாம் வெள்ளி யையொட்டி நடந்த, சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் இம் மாதத்தில் நடக்கிறது. உடுமலை, மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, காலை, 6:00 மணி முதல் சிறப்பு அலங்காரம் நடந்தது.
பக்தர்கள், விளக்கு போடுவதும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் வழிபட்டனர். மாலை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், காலை, 7:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, கோ பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.தளி ரோடு, காமாட்சி அம்மன் கோவிலில், காலை, 11:00 மணிக்கு அம்மனு க்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. குறிஞ்சேரியில் சுயம்புவாக அவதரித்துள்ள பூமி லட்சுமி அம்மன் கோவிலில், ஆடிவெள்ளியையொட்டி, அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன், சங்கிலி நாடார் வீதி பத்ரகாளியம்மன், குட்டைத் திடல் துர்க்கையம்மன், கல்பனா ரோடு காளியம்மன் கோவில்களிலும் ஆடிவெள்ளி சிறப்பு பூஜையையொட்டி, அம்பாள் வண்ண வண்ண பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஆடி வெள்ளியில் பல்வேறு அலங்காரத்தில் பவனி வரும் அம்மனின் அருள் வேண்டி, சுற்றுப் பகுதி அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள், விளக்கேற்றியும், மங்கள கயிறு, மஞ்சள் குங்குமம், வளையல்கள் என, மங்கலப் பொருட்களை வழங்கியும், கூழ், பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை படைத்தும் வழிபட்டனர்.