பதிவு செய்த நாள்
08
ஆக
2019
03:08
சேலம்: சேலம் நகரம், ஆடி திருவிழாவால், விழாக்கோலம் பூண்டது. ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்தல், உருளுதண்டம், மாவிளக்கு ஆகியவை, நேற்று முன்தினம் (ஆக., 6ல்) இரவில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, மாரியம்மனை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்து வழிபட்டனர்.
அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், நேற்று (ஆக., 7ல்) காலை, தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், பெண்கள், சிலர் குழந்தைகளுடன் தீ மிதித்து, பரவசமடைந் தனர். அதேபோல், குகை, காளியம்மன் மாரியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்தல், உருளுதண்டம், இரவில், அலகு குத்தி, பக்தர்கள் வழிபட்டனர். செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் வழிபாடு, அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. அரிசிபாளையம் மாரியம்மன் கோவிலில், 15 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதேபோல், சேலம் மாவட்டத்திலுள்ள, மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் கோவில்களில், ஆடி திருவிழாவில், நகரமே விழாக்கோலம் பூண்டது.
ஆடுகள் பலியிட்டு...: சேலத்தில், ஆடி திருவிழாவால், நடப்பாண்டில், ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது அதிகரித்துள்ளது. 2018 ஆக., 8ல், கருணாநிதி இறந்து, துக்கம் அனுசரிக்கப்பட்டதால், சேலத்தில், 3,000 ஆடுகள், 5,000 கோழிகள் மட்டும் பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நடப்பாண்டு, 5,000 ஆடுகள், 12 ஆயிரம் நாட்டுக்கோழி சேவல் களை பலியிட்டு, மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தியதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
வைர கொண்டை அலங்காரம்: சேலம், சாமிநாதபுரம், விநாயகர் மாரியம்மன் கோவிலில், நேற்று (ஆக., 7ல்) காலை முதல், ஏராளமான பக்தர்கள், உருளுதண்டம் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாவிளக்கு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அம்மன், வைர கொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில், திருப்பாற் கடலில், சேஷ வாகனத்தில், பெருமாள் சமேத லட்சுமியுடன் வீற்றிருப்பது போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கண்ணனூர் மாரியம்மன்: தாரமங்கலம், கண்ணணூர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 18ல், கம்பம் நடும் விழா நடந்தது. நேற்று, ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து, கோழி பலியிட்டு, சுவாமியை வழிபட்டனர். காலை, 4:00 மணி முதல், பக்தர்கள் தீ மிதித்தல் விழா நடந்தது. அதில், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று 8ம் தேதி இரவு, வண்டிவேடிக்கை, நாளை 9ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
அதேபோல், பூசாரிப்பட்டி, கந்தமாரியம்மன் கோவிலில், பலர் பொங்கல் வைத்து, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். உற்சவர் அம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.