பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
பேரூர் :கோவை,பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திரத்தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு, 7.00 மணிக்கு, வாஸ்துசாந்தி பூஜையுடன், துவங்கியது. நேற்று காலை, 6.30 மணிக்கு, பட்டிவிநாயகர் கோவிலிலிருந்து, மேளதாளத்துடன், புற்றுமண் எடுத்து வரப்பட்டு, கொடிமரத்தடியில் ரிஷபயாகம் நடந்தது. முளைப்பாரியில், நவதானியமிட்டு, ரக்ஷாபந்தன பூஜையும், 7.00 மணிக்கு, பட்டீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, வள்ளிதேவசேனா, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் , நடராஜர், சிவகாமியம்மன், பட்டிமுனி, கோமுனி, பச்சை நாயகியம்மன், அதிமூர்க்கம்மன், சுந்தரமூர்த்தி சாமி, தெப்பத்தேர் சாமி, பஞ்சமூர்த்திகள் ஆகியோருக்கு, ரக்ஷபந்தனம் செய்யப்பட்டது. காலை, 8.50 மணிக்கு, ரிஷபவாகனக்கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது.
வரும், 31ம்தேதி இரவு, பஞ்சமூர்த்திகள், வெள்ளி ரிஷபவாகனகாட்சி மற்றும் அறுபத்து மூவர் காட்சியும், ஏப். 1ம் தேதி இரவு, திருக்கல்யாண உற்சவமும் நடத்தப்பட்டு, வரும் 2ம் தேதி, மாலை 6.30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. வரும், 4ம் தேதி இரவு, தெப்பத்திருவிழாவும், 5ம் தேதி, அதிகாலை, 3.30 மணிக்கு, ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சன தரிசனக்காட்சி, மகா தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்துசமயஅறநிலையத்துறை, பேரூர் கோவில் நிர்வாகமும், இணைந்து செய்து வருகிறது.