பதிவு செய்த நாள்
10
ஆக
2019
03:08
கரூர்: ’கோவில்களில், நிர்ணயிக்கப்பட்ட திருமண கட்டணத் தொகையை விட, மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்’ என, கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில், சுபமுகூர்த்த நாட்களில், அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடக்கின்றன. இந்த திருமணங்களை நடத்த அனுமதிக்கும் அலுவலர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். ஏழை, எளிய மக்களே பெரும்பாலும் கோவிலில் திருமணம் செய்கின்றனர். வசதியற்றவர்களிடம், மூன்று மடங்கு திருமண கட்டணத்தொகை வசூலிக்கப்படுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இதில் கேட்பவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படுகிறது, அதையும் உடனடியாக கொடுக் காமல் தட்டிக்கழித்து நாட்களை கடத்தி வருகின்றனர்.
திருமண சான்று உடனே பெறமுடியாத காரணத்தால், அரசு வழங்கும் திருமண நிதி உதவியை பெற முடிவதில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இனியாவது, திருமண கட்டணத் தொகையை, பக்தர்கள் நன்கு அறியும் வகையில், அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.