பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியற்றத்துடன் நேற்று துவங்கியது. ஐம்பெரும் திருச்சபைகளில் முதற் சபையான ரத்தின சபையாக விளக்குகிறது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். இக்கோவிலில் 12 நாள், பங்குனி மாதம், பிரம்மோற்சவ, 12 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் சிங்க வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 9 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சூர்ய பிரபையில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்ன வாகனம், பூத வாகனம் என, தினசரி ஒரு வாகனத்தில், வரும் 7ம் தேதி வரை உற்சவ மூர்த்தி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 2ம் தேதி கமலத் தேரும், 3ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி, தினமும் காலை 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் தனபால் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.