மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் ஆலய ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நேற்று வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார்.
ஆக.,2 அன்று கொடியேற்றத்துடன் ஆடித்தபசு விழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் அன்னம், கமலம், யானை, கிளி, ரிஷபம், காமதேனு, குதிரை வாகனங்களில் திருவீதி உலா வந்தார். நேற்று ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நேற்று மாலை வைகை ஆற்றிற்குள் அமைக்கப்பட்ட கால்பிரவு கிராமத்தார் மண்டகப்படியில் அம்பாள் எழுந்தருளினார். சோமநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அம்பாளுக்கு தபசு கோலத்தில் காட்சி அளித்தார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்றைய விழாவிற்கு திருமணம் ஆகாத பெண்கள் இரு மாலையுடன் வந்து, சுவாமிக்கு சாற்றிவிட்டு மீண்டும் அதில் ஒரு மாலையை எடுத்து சென்றால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக ஏராளமான பெண்கள் மாலைகளுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.