கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் திருக்கோயில். மங்களகரமாக வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரியோ கேட்டதை கொடுக்கும் மகாலட்சுமியாக இருக்கிறார். அகிலாண்டேஸ்வரியின் பின் கோபுரம் துர்க்கையாகவும், முன் கோபுரம் சரஸ்வதியாகவும் காணப்படுகிறது. பொதுவாக கோயில் முகப்பு ராஜகோபுரம் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரமாக காட்சியளிக்கும். இத்திருக்கோயிலிலோ முன்புறம் உள்ள ராஜகோபுரத்தில் மிகப்பெரிய நந்தியே சிறப்பாக உள்ளது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரசமரமும் விநாயகரும் இருந்த இக்கோயிலில் காலவ முனிவர் இறைவனை நினைத்து தவம் செய்து வந்தார் ஒருமுறை முனிவர் காசிக்கு சென்று சிவந்த மேனியுடன் கூடிய பாணலிங்கத்தை எடுத்து வந்து இங்கு காலவேசுவரர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்ததுடன், காலவ தீர்த்தமும் தோற்றுவித்து பலகாலம் வழிபட்டு வந்தார். அத்துடன் தினமும் இக்கோயில் அருகே உள்ள பட்டீஸ்வரரையும் தரிசித்து வந்தார். அப்போது தான் பட்டீஸ்வரர் தனது ஆனந்த நர்த்தனத்தை, காலவ முனிவர், நாரதர், அகத்தியர் ஆகியோருக்கு அரசம்பலவாணர் கோயிலில் கட்டியுள்ளார்.