திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோயில்பட்டி கைலாச நாதர் கோயில் உள்ளது. இங்கே நவக்கிரக சன்னதி விசேஷம். அதாவது இங்கு நவக்கிரகங்கள் அமர்ந்தநிலையில் காட்சி தரும். பொதுவாக நவக்கிரகங்கள் நின்ற நிலையிலேயே எங்கும் காணப்படும். ஆனால் இந்தக் கோயிலில் அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். அமர்ந்த நிலையில் நவகிரகங்கள் வரிசையில் இக்கோயில் தமிழகத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மேற்கு பார்த்த கோயில்களில் இதுவும் ஒன்று, தட்சிணாமூர்த்தி அருகில் பலிபீடத்துடன் அஷ்டமாசக்திகள் அமைந்துள்ளதும் இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். மேற்கு பார்த்த சன்னதியாக தண்டாயுதபாணி செவ்வாய் தோஷ பரிகாரத்திற்காக நிர்மாணம் செய்யப்பட்டு உள்ளார். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அடுத்தபடியாக செவ்வாய் தோஷ பரிகார தலமாக அமைந்துள்ளது. இம்மாதிரியான நவக்கிரகங்கள் சித்தர்களால் நிர்மாணிக்கப்பட்டதாக செவிவழி தகவல்கள் கூறுகின்றன. இங்கு தினமும் ஐந்து கால பூஜையும், சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, பிரதோஷம், சஷ்டி, அஷ்டமி மற்றும் மாதாந்திர குருவார் சுக்கிரவார் அபிஷேகங்கள் நடக்கிற. மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படும் வைகாசி விசாக திருவிழா பத்து நாட்கள் நடக்கிறது.