பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: மழை வேண்டி, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மன் கோவில்களில் அபிஷேகம் செய்தனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள, கே.பூசாரிப்பட்டி, கீழ்பூசாரிப்பட்டி, கன்னியப்பன் நகர், கெட்டுக்கொல்லை, அக்கப்பன் நகர், சின்னப்பன் நகர், கேரப்பனூர் பகுதியில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட இப்பகுதியில், நெல், ராகி, தக்காளி மற்றும் காய்கறிகள், பயிர்களை சாகுபடி செய்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால், விவசாயம் மேற்கொள்ள முடியாமல், பலர் கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், இதுவரை பருவமழை துவங்காததால், விவசாயம் செய்ய முடியாமல் இப் பகுதியினர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், இப்பகுதி மக்கள் நேற்று 15ல் மழை வேண்டி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து நான்கு கரகங்களுடன் பூசாரிகளும், 500க்கும் மேற்பட்ட பெண்களும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மாரியம்மன், குண்டிமாரியம்மன், பட்டாளம்மன், பொன்னியம்மன், காளியம்மன் கோவில்களில் அம் மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.