பதிவு செய்த நாள்
17
ஆக
2019
11:08
காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த வைபவத்தில் ஒரு கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்றிரவு அத்தி வரதரை அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்ய உள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் விதவிமான பூ மற்றும் பட்டு ஆடைகளில் ராஜ அலங்காரத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்தார். நேற்று ரோஜா நிற பட்டாடையில் எழுந்தருளினார். அத்தி வரதரை தரிசிக்க வெளியூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்தனர். வைபவ கடைசி நாளான நேற்று பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. நேற்று 3.50 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் ஒரு கோடியே 45 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின் நடை சாற்றப்பட்டது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது தந்தை குமரி அனந்தன் மற்றும் குடும்பத்தினர் அத்தி வரதரை நேற்று தரிசனம் செய்தனர்.
கல்வெட்டில் கூறியிருப்பது என்ன?: கடந்த,1937ம் ஆண்டு, அத்திவரதர்,குளத்திலிருந்து எழுந்தருளிய விபரங்கள் குறித்த கல்வெட்டு, அத்தி வரதரை வைக்க உள்ள மண்டபத்தின் கீழ் உள்ளது. அந்த கல்வெட்டில் கூறியிருப்பதாவது: சாலிவாஹனசகாப்தம் - 1860 ஈசவா வருஷம் ஆனி மாதம் 29 (12.-7-.1937) ஸ்ரீ அத்தி வரதர் வெளியில் எழுந்தருள பண்ணி 48 நாள் வஸந்தேரத்ஸவ மண்டபத்தில் ஆராதிக்கப்பட்டு ஆவணி மாதம், 13ம் தேதி மறுபடி இந்த நடவாபியில் எழுந்தருள பண்ணப் பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு தாமதம் ஏன்: நீராழி மண்டபத்தில் அத்தி வரதர் வைக்கப்படும் இடத்தில் 2019ம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதாக குறிப்பிட்டு இன்று கல்வெட்டு வைக்கப்படுகிறது. இதேபோல் 1979 மற்றும் 1937ம் ஆண்டுகளில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வைபவம் 1937ம் ஆண்டில் மட்டும் எப்படி மாறியது என சந்தேகம் எழுந்தது.
இது குறித்து விசாரித்தபோது வரதராஜ பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைத்து 1939ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதனால் முன்கூட்டியே 1937ம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குளத்திற்குள் அத்தி வரதர் வைக்கப்படும் நிகழ்வு விபரங்கள்: அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் ஸ்தாபனம் செய்ய தேவையான பணிகள் நேற்று இரவில் இருந்து நடைபெற்றது. அத்தி வரதர் வைக்கப்படும் இடம் துாய்மை செய்யப்பட்டது.சுப்ரபாத பாடலும், மங்கள வாத்தியங்களுடன் அத்தி வரதர் இன்று காலை எழுந்தருளுவார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்; கோவிலில் இட்லி, பொங்கல், தோசை உள்ளிட்ட நிவேதனங்கள் சுவாமிக்கு படைக்கப்படும். வெட்டி வேர், பச்சை கற்பூரம் உள்ளிட்டவை சேர்த்து தைலகாப்பு அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.
மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மண்டபத்திலிருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் நீராவி மண்டபத்திற்கு அத்தி வரதரை எடுத்து சென்று ஸ்தாபனம் செய்யப்படும். மேற்கு திசையில் தலையும், கிழக்கு திசையில் சுவாமி பாதமும், இருக்கும்படி சயன கோலத்தில் அத்தி வரதர் ஸ்தாபனம் செய்யப்படுவார். பேழை எதுவும் இல்லாமல் அத்தி வரதர் மட்டுமே வைக்கப்படுவார். தண்ணீரில் மிதக்காமல் இருக்க சிலை மீது நாக வடிவிலான சிலைகள் வைக்கப்படும். அத்தி வரதரை ஸ்தாபனம் செய்யும் நிகழ்வை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அத்தி வரதரை ஸ்தாபனம் செய்த பின் பொற்றாமரை குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அனந்த சரஸ் குளத்தை நிரப்புவர்.
சுத்தமான தண்ணீர் நிரப்ப உத்தரவு: இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் இடத்தை சுத்தமான தண்ணீரால் நிரப்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் காஞ்சிபுரத்தில் மழை கொட்டிய போதும், அத்திவரதரை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையில் அத்திரவதரை தரிசித்தனர்.