பதிவு செய்த நாள்
17
ஆக
2019
02:08
உடுமலை:உடுமலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 257 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், உடுமலை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம், மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் 257 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீரப்பன் கூறியதாவது: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு தலைப்பிலும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ’தெய்வீக த்தமிழை காப்போம்; போலி தமிழினவாதத்தை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் நடக்கிறது. இந்த ஆண்டு, பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ராஜவிநாயகர், செல்வவிநாயகர், சயனகோல விநாயகர் என அதிகப்பட்சமாக 11 அடி வரையுள்ள சிலைகள், தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இயற்கை பொருட்களை கொண்டு சிலை தயாரிக்கப்படுகிறது.
செப்., 2ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, செப்., 4ம் தேதி விசர்ஜன ஊர்வலம், உடுமலை நேதாஜி மைதானத்தில் மாலை, 4:00 மணிக்கு துவங்கி, பிரதான வீதிகள் வழியாக செல்கிறது. ஊர்வலத்தில் சுவாமிகளின் பிரமாண்ட சிலைகளுடன் கூடிய வாகனங்கள், பாரம்பரிய இசை வாத்தியங்கள் பங்கேற்கின்றன.
இவ்வாறு, வீரப்பன் தெரிவித்தார்.விசர்ஜனம் வழக்கமாக, எஸ்.வி.,புரம் பி.ஏ.பி., கால்வாயில் சிலைகள் கரைக்கப்படும். தற்போது தண்ணீர் திறக்கப்படாததால், அமராவதி ஆற்றில் கரைக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது.