பதிவு செய்த நாள்
30
மார்
2012
11:03
திருநெல்வேலி:டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்களின் "கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நெல்லை டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 19ம் தேதி காலை கொடியேற்றமும், மாலையில் திருமஞ்சனமும், இரவு அன்னவாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. 23ம் தேதி இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. கடந்த 24ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை சுவாமி வீதி உலா மற்றும் திருமஞ்சனமும், இரவு சுவாமி பல்வேறு வாகங்களில் வீதி உலாவும் நடந்தது. பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தேருக்கு எழுந்தருளலும் நிகழ்ச்சியும், 7 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு பூம்பல்லக்கு நடந்தது. இன்று(29ம் தேதி) மதியம் 12 மணிக்கு குறுக்குத்துறை பத்மநாப தீர்த்த கட்டடத்தில் நீலமணிநாதர் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தவாரியும், மாலை பல்லக்கு வீதி உலாவும், 30ம் தேதி காலை உத்ஸவ சாந்தி, கலசமாற்று மற்றும் திருமஞ்சனமும், மாலை சந்திரபிரபை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 31ம் தேதி மாலை ஊஞ்சல் திருநாளும், 31ம் தேதி காலை ஸ்ரீராமநவமி உற்சவம், திருமஞ்சனமும், இரவு ஆஞ்சநேயர் வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.