பதிவு செய்த நாள்
26
ஆக
2019
12:08
சேலம்: கோகுலாஷ்டமி விழாவையொட்டி, சேலத்தில், பல்வேறு இடங்களில் உறியடி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விஷ்ணு கோவில்களில், வைகானாசம், பாஞ்சாத்ரம் எனும், ஆகம முறைப்படி, திருவிழா கொண்டாப்படுகிறது. பாஞ்சாத்ர முறைப்படி, சேலம் பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், அதன் அருகேவுள்ள கிருஷ்ணர் கோவில், சின்னக்கடை வீதி வேணுகோபால சுவாமி கோவில், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில், நேற்று முன்தினம், கோகுலாஷ்டமி விழாவை கொண்டாடினர். நேற்று, கண்ணன், பானைகளை உடைத்து, வெண்ணெய் திருடிய லீலைகளை நினைவு கூறும் வகையில், கோவில்கள் முன், முக்கிய வீதிகளில், உறிகள் கட்டி, அதில் தின்பண்டங்களை கட்டி தொங்க விட்டு, அதை எட்டிப்பிடித்து விளையாடி, சிறுவர்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து, தேங்காய் மட்டைகளால் செய்யப்பட்டு, துணியால் போர்த்திய சிறு துண்டை, நீண்ட கயிறு கட்டி இழுக்க, அதை தடியால் அடித்து பிடிக்கும் விளையாட்டை, சிறுவர்கள் விளையாடினர். அப்போது, தடியால் அடிப்பவரை, அடிக்க விடாமல், சிறுவர்கள் தண்ணீரை, அவர் முகத்தில் அடித்தனர். உறியடி உற்சவத்தின்போது நடக்கும் இந்த விளையாட்டை, பட்டைக்கோவில் முதல் அம்மாபேட்டை காளியம்மன் கோவில் வரையுள்ள அனைத்து தெருக்களில், உறி அமைத்து, சிறுவர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.