பதிவு செய்த நாள்
30
ஆக
2019
11:08
சபரிமலை: சபரிமலை கோவில் விவகாரத்தில், கேரள மாநில அரசின் நிலையில், எந்த மாற்றமும் இல்லை. இந்த விஷயத்தில், பா.ஜ., வினர், பக்தர்களுக்கு தவறான தகவலை கூறி, ஏமாற்றுகின்றனர், என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
தடை நீக்கம்: கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்வதற்கு தடை இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த தடை நீக்கப்பட்டு, பெண்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, கேரள அரசு அமல்படுத்தியது. ஆனால், அரசுக்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், பா.ஜ.,வினரும், ஹிந்து அமைப்பினரும், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
தோல்விக்கு காரணம் இல்லை: கடந்த லோக்சபா தேர்தலில், மார்க்கிஸ்ட் கட்சி தோல்வியடைவதற்கு, இது தான் முக்கிய காரணம் என, கூறுவதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், மாநில அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.சபரிமலை விவகாரம், தேர்தல்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சபரிமலை விஷயத்தில் அவசர சட்டம் இயற்றப் போவதாக கூறி, பக்தர்களை, பா.ஜ.,வினர் ஏமாற்றுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.