திருப்பதி மலை அடிவாரத்தை ’அலிபிரி’ என்பர். பாத யாத்திரையாக வருபவர்கள் அலிபிரியில் இருந்தே திருப்பதி மலைமீது ஏறுவர். இந்த பாதைக்கு ’சோபன மார்க்கம்’ என்று பெயர். இப்பாதையில் முதலில் தரிசிக்க வேண்டிய இடம் ஸ்ரீபாதமண்டபம். ஏழுமலையானுக்கு தொண்டு செய்த திருமலைநம்பி என்பவர், ஒருமுறை ராமானுஜரின் ராமாயண விளக்கம் கேட்க அடிவாரம் வந்தார். நேரம் போனது தெரியாமல் இருந்ததால் உச்சிக்கால பூஜை நேரம் நெருங்கியது. அவரது வருத்தம் தீர ஏழுமலையானே மலையில் இருந்து கீழே இறங்கி வந்தார். ஏழுமலையான் பாதம் பதிந்த இடமே ’ஸ்ரீபாத மண்டபம்’ எனப்படுகிறது.