பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
ஈரோடு: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று 2ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்பட்டது. முனிசில்பல் காலனி, சக்தி விநாயகர் கோவிலில் மூலவர் தங்ககவச அலங்காரத்திலும், மோளக்கவுண்டன்பாளையம் காந்திபுரம் சித்தி விநாயகர், வாழைப்பூ அலங்காரத்திலும், மாநகராட்சி வலம்புரி கற்பக விநாயகர் மற்றும் சூரம்பட்டி நால்ரோடு வலம்புரி செல்வ விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஈரோடு இந்து முன்னணி சார்பில் மாநகரில், 108 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.
சம்பத் நகர் பிரிவில் வைக்கப்பட்ட, 11அடி உயரமுள்ள வீர விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. வ.உ.சி., பூங்கா வீரபத்திர வீதி, செல்வ விநாயகர் ஆலய மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக, விழாவையோட்டி யாகவேள்வி பூஜை நடந்தது. இதே போல், மாநகரின் பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து கொழுக்கட்டை, லட்டு, சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களை நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்கினர்.
* சென்னிமலை வட்டாரத்தில், பா.ஜ., மற்றும் இந்து முன்னணி சார்பில், சென்னிமலை பஸ் ஸ்டாண்ட், பசுவபட்டி, வெள்ளோடு, கவுண்டிச்சிபாளையம், 1010 நெசவாளர் காலனி, கிழக்கு புது வீதி உட்பட எட்டு இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று 2ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சென்னிமலையில், அனைத்து விநாயகர் கோவில்களிலும்,விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் ஒன்றிய பகுதிகளான, மாதம்பாளையம், புங்கம்பள்ளி, காவிலிபாளையம், தொட்டம்பாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட கிராமங்களில், மூன்று அடி முதல், 16 அடி வரை, விநாயகர் சிலைகள் வைக்கப் பட்டு கோலகலமாக பூஜைகள் நடந்தன. புன்செய்புளியம்பட்டி, ஓங்கார பிள்ளையார், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், சக்தி விநாயகர், அரசமரத்தடி விநாயகர், முத்துவிநாயகர் கோவில்களில், கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள், நேற்று 2ம் தேதி நடந்தன. தொடர்ந்து, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேகங்கள் செய்விக்கப் பட்டன.
* கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஒன்பது அடி உயரத்தில் மூல விநாயகர் சிலை வைக்கப்பட்டு, இந்து முன்னணியினர் நேற்று 2ம் தேதி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். சிவகிரி, மொடக்குறிச்சி, மலையம்பாளையம், அரச்சலூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
* கோபி டவுன் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்வான, விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. கோபி டவுனில் பூஜிக்கப்பட்ட, 15 சிலைகள், வாகனங்களில் பவனி வந்து சீதா கல்யாண மண்டபம் முன் நிறுத்தப்பட்டது. இதேபோல், மொடச்சூர் பகுதியை சேர்ந்த, 11 சிலைகள், தான்தோன்றியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., சார்லஸ் கண்காணிப் பில், இரு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் மொத்தம், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோபி மற்றும் மொடச்சூர் பகுதி விநாயகர் சிலைகள், நஞ்சை புளியம் பட்டி பவானி ஆற்றை அடைந்தனர். கவுந்தப்பாடியில், 30 சிலைகள், பெருந்தலையூர் அருகே பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. தவிர, டி.ஜி.,புதூரில், 15 சிலைகள், டி.என்., பாளையத்தில், 11 சிலைகள் பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர். இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* கோபி, கச்சேரிமேடு மற்றும் வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலில் அபிஷேகம் நடந்தது. கோபி பச்சமலை, பவளமலை, பாரியூர், மொடச்சூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.