பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல்வேறு விநாயகர் கோவில்களிலும் நேற்று 2ம் தேதி சிறப்பு வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சப் -ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், காலை, 5:00 மணிக்கு, விநாயகருக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
12 வகையான பிரசாதம் படைத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தங்கக் கவச அலங்காரத்தில், சித்தி விநாயகர் அருள் பாலித்தார். காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், கொத்தபேட்டா ஞான விநாயகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர், காந்தி நகர் வலம்புரி விநாயகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிப்பு வினை தீர்த்த விநாயகர், டான்சி வளாகம் செல்வ விநாயகர், ராசுவீதி மகா கணபதி, அம்மன் நகர் பஞ்சமுக விநாயகர், பர்கூர் மெயின் ரோடு வரசித்தி விநாயகர் கோவில் உள்பட ஏராளமான விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 1,400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜைகள் செய்தனர். வீடுகளில் மக்கள், விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பல்வேறு வகை பழங்களை படைத்து வழிபட்டனர்.
* தர்மபுரி எஸ்.வி.,ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவிலில், சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. பின், 1,008 அர்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி கோடி விநாயகர் கோவில், இலக்கியம்பட்டி செல்வவிநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில் உட்பட, தர்மபுரியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று 2ம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. முன்னதாக, நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதிகாலையில் பக்தர்கள் தங்கள் பகுதியில் கொட்டகை அமைத்து, பல்வேறு வடிவங்கள் மற்றும் பல அடி உயர விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். கொழுக்கட்டை, சுண்டல், கடலைபொரி வைத்து படைத்து வழிபட்டனர்.
* பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் எதிரே மூலைப்பிள்ளை விநாயகர் கோவிலில், நேற்று 2 ல், காலை சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதேபோல், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப் பூர். கம்பைநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில் களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடந்தது. பல்வேறு வடிவ விநாயகர் சிலைகளை வைத்து, மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.