பதிவு செய்த நாள்
05
செப்
2019
12:09
மதுரை, மதுரையில் 226 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டன. மதுரை கீழமாசிவீதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் பரமசிவம், பொதுசெயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.
இணை அமைப்பாளர் பொன்னையா பேசியதாவது: ஆழ்வார்கள், நாயன்மார்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். இந்து மதத்தை அவமதிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை வேடிக்கை பார்க்காமல் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளால் நாட்டுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றார். சிவபிரபாகர காமராஜ் சுவாமிகள், மாவட்ட அமைப்பாளர் தங்கம் வெங்கடேஷ் பேசினர். அரசரடி இல்லத்து பிள்ளைமார் சங்க செயலாளர் கல்யாணசுந்தரம், நாயுடுமகாஜன சங்க மாநில பொது செயலாளர் ரமேஷ், மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 226 சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டன. சிம்மக்கல் அனுமார் கோயில் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தால் சிம்மக்கல், கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* திருமங்கலம்: திருமங்கலம் நகர், பச்சக்கோப்பன்பட்டி, சித்தாலை, மேலஉரப்பனுார் உட்பட திருமங்கலத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், கக்கன் காலனி ஓடைப்பகுதியிலிருந் ஊர்வலமாக கிளம்பி ஆலம்பட்டி அருகே உள்ள கல்குவாரி பள்ளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. டி.எஸ்.பி.,க்கள் அருண், விஜய்குமார், இன்ஸ்பெக்டர் ராஜாமணி, விஜயா, விஜயகாண்டீபன், முத்துராமலிங்கம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.