பதிவு செய்த நாள்
05
செப்
2019
02:09
கடலுார் : விநாயகர் சிலைகள் இன்று (செப்., 3ல்) விஜர்சனம் செய்யப்படுவதால், மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் (செப்., 2ல்) கொண்டாடப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 1,398 இடங்களில் சிலைகள் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
இந்த சிலைகள், கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், இன்று, விஜர்சனம் செய்யப்பட உள்ளன.மாவட்டத்தில், கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலுார் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகின்றன.
சிதம்பரம் பகுதியில் உள்ள சிலைகள், கிள்ளை கடற்கரை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் விஜர்சனம் செய்வது வழக்கம் இதற்காக போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. சிலைகளை கரைப்பதற்காக கடலில் இறங்கி ஆபத்தில் சிக்காமல் இருக்க சில்வர் பீச்சில் பாதுகாப்பு தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கரைக்கும் போது, பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, பல்வேறு இடங்களில், 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.