பதிவு செய்த நாள்
05
செப்
2019
03:09
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில், நேற்று 4ம் தேதி, 592 விநாயகர் சிலைகள் கரைக்கப் பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் போலீஸ் உட்கோட்டத்தில், 550 விநாயகர் சிலைகளும், கிருஷ்ணகிரியில், 220, பர்கூர், 180, ஊத்தங்கரை, 170, தேன்கனிக்கோட்டை, 280 சிலைகள் என, மாவட்டம் முழுவதும், 1,400 விநாயகர் சிலைகளை வைத்துள்ளனர்.
இதில், முதல் நாளில், 56 சிலைகள் கரைக்கப்பட்டன. மூன்றாவது நாளான நேற்று 3ம் தேதி, வாணியம்பாடி, பர்கூர், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட, 592 சிலைகளை, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை பின்புற பகுதியில் கரைக்கப்பட்டன. விநாய கர் சிலைகளுக்கு போடப்படும் மாலை, வேட்டி மற்றும் பூஜை பொருட்களால், நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க, சிலைகளை கரைக்கும் முன், அவற்றை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதேபோல், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டம் திப்பனப்பள்ளி மற்றும் போச்சம்பள்ளி, பாரூர் உட்பட சுற்றுவட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள், போச்சம்பள்ளி மஞ்சமேடு அருகே, தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன.
* வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், 30க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை நேற்று 4ம் தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என்., கொத்தூர் ஏரியில் நேற்று கரைக்கப்பட்டன.
* தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் நாகமரை, நாகவதி அணை கரையோரத்தில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று 4ம் தேதி அதிகாலை முதலே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுவாமி சிலைகள் கரைக்கப்பட்டன. பெரிய சிலைகள் கிரேன் உதவியோடு ஆற்றில் கரைக்கப் பட்டன. மாலை, 6:00 மணி நிலவரப்படி, ஒகேனக்கலில் 635 சிலைகளும், நாகமரை பகுதியில், 119 சிலைகளும், நாகவதி அணை பகுதியில், 116 சிலைகளும் கரைக்கப்பட்டன.
* அரூர் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட, கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர், உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் கோவில், வீடுகளில், விநாயகர் சிலை களை வைத்து மக்கள் வழிபட்டனர். பூஜிக்கப்பட்ட, 261 சிலைகளை நேற்று 4ம் தேதி காலை முதல், மாவட்ட நிர்வாகம் சார்பில், அறிவிக்கப்பட்டிருந்த வாணியாறு அணை, இருமத்தூர் தென்பெண்ணையாறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பக்தர்கள் சரக்கு வாகனங்களில் எடுத்துச்சென்று நீரில் கரைத்தனர்.
* விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில் வேலூரில் வைக்கப்பட்ட, 300 விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க, நேற்று 4ம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த விழாவில், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசுராஜா, வேலூர் நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, தங்கக்கோவில் இயக்கு னர் சுரேஷ்பாபு ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். சத்துவாச்சாரியில் இருந்து சைதாப்பேட்டை, மண்டி வீதி, அண்ணா சாலை வழியாக சதுப்பேரிக்கு ஊர்வலம் சென்று, அங்குள்ள சதுப்பேரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
திருவலம் சாந்தா சாமிகள், இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார் தலைமையில், 500 போலீசார் பாது காப்பு பணிகள் மேற்கொண்டனர்.
* திருவண்ணாமலை நகரில் வைக்கப்பட்ட, 350க்கும் மேற்பட்ட சிலைகள், நேற்று 4ம் தேதி காலை, 10:00 மணி முதலே தனித்தனியாக எடுத்து செல்லப்பட்டு தாமரை குளத்தில் கரைக் கப்பட்டன. இந்து முன்னணி சார்பில் மாலை, 3:00 மணிக்கு காந்தி சிலை முன்பு, நகர செயலாளர் துரைராஜ் தலைமையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைப்பு நடந்தது.