பதிவு செய்த நாள்
03
ஏப்
2012
12:04
காஞ்சிபுரம் : ஆயிரம் ஆண்டுகள் பழமையான கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோவில், காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இக்கோவில், முதலாம் ராஜேந்திர சோழ மன்னனின் குருவான, சர்வசிவ ஈசான பண்டிதர் வேண்டுகோளின்படி, கடந்த 1012ம் ஆண்டு, கிராமத்தின் ஈசான மூலையில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலும், மேற்கே பேசும் பெருமாள் கோவிலும் கட்டியுள்ளார். இப்பெருமாள் பேசியதாலேயே, பேசும்பெருமாள் என்ற அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில், இக்கோவில் முழுவதும் சிதையுண்டு காணாமல் போனது. இந்நிலையில், 1995ம் ஆண்டு, இங்குள்ள குளத்தைச் சீர் செய்யும்போது, புதையுண்டு இருந்த ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பேசும் பெருமாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து, பேசும்பெருமாளுக்கு புதிதாகக் கோவில் கட்டி, கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தினர். அதைத் தொடர்ந்து தினசரி பூஜைகளும், ஆண்டுதோறும் விழாக்களும் நடந்து வருகின்றன. கோவில் கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் 1000 ஆண்டுகள் நிறைவடைகிறது. இக்கோவிலில், மன்னர் காலத்தில் நடைபெற்று வந்த தேரோட்ட விழா, எந்தக் காலம் வரை நடைபெற்றது என தெரியவில்லை. ஆனால், தேர் நிறுத்தி வைத்திருந்த தேரடி என்ற இடம் மட்டும் தற்போது உள்ளது. கோவிலுக்கென புதிய தேர் செய்ய, கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினர் முடிவெடுத்து, தற்போது 25 அடி உயரம் உள்ள மரத்தேரை செய்து முடித்தனர். இதையடுத்து, வரும் 5ம் தேதி வியாழக்கிழமை கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணமும், முதலாண்டு தேரோட்ட விழாவும் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கும், பகல் 11 மணிக்கு உற்சவருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு தேரோட்ட விழாவும் நடைபெறுகிறது.