புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா திருக்கொடியேற்றுடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். திருக்கோவில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்றுமுன்தினம்(1ம் தேதி) இரவு திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து அம்மன் சர்வ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டனர். பங்குனித் திருவிழா 10ம் தேதி முடிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.