பதிவு செய்த நாள்
03
ஏப்
2012
12:04
ராசிபுரம்: கைலாசநாதர் கோவிலில், ஏப்ரல் 6ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற தர்மசம்வர்தனி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில், பங்குனி உத்திர விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டு விழா, நாளை (ஏப்ரல் 4) துவங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர் பூஜை, ஸ்வாமி ரதத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 5ம் தேதி காலை 7 மணிக்கு உத்திர விழாவுடன், பவுர்ணமி பூஜை, காலை 8 மணிக்கு கிருஷ்ணா சினிடோன் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 11 மணிக்கு, பாலதண்டாயுதபாணி, ஆறுமுக சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்வாமிக்கு வெள்ளிக்கவசம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பகல் 12 மணிக்கு, சுப்ரமணிய ஸ்வாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, அலங்கார ரதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏப்ரல் 6ம் தேதி மாலை 6 மணிக்கு, வசந்த விழாவும் நடக்கிறது. அதில், திருமணத்தடை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்றால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி பக்தர் குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.