சிவபெருமானின் விடைவாகனம் வெள்ளிப் பனிபோல் திகழ்வதால், அது நாக நந்தி எனப்படுகிறது. ஸ்ரீசைலம் - நந்திதேவர் மலை வடிவாக நிற்கும் தலமாகும். தேவாரத்திலும் நந்தி வாகனம் வெள்ளிப் பனி மலைபோல் இருப்பதாக பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. சில இடங்களில் நந்தியின் முதுகில் நாகம் இருப்பது போன்று வடித்துள்ளனர். காசியில் விஸ்வநாதர் ஆலயத்தின் முதன்மை நந்தி இந்தக் கோலத்திலேயே உள்ளது. சிவபெருமானே பாம்பு வடிவில் நந்தியின் முதுகில் வீற்றிருக்கிறார் என்றொரு விளக்கமும் தருவார்கள். சிவனாரின் இடையில் திகழும் நாகமே... நந்தியின் மீது அமர்ந்துகொண்டு அவரைப் போன்றே சிவனாரை நோக்கி தவம் செய்து கொண்டும், சிவனாரின் ஏவலுக்காக காத்துக் கொண்டும் இருப்பதாக சிலர் விளக்குவார்கள். எது எப்படியோ, நந்தியின் கொம்புகளுக்கு இடையே பாம்பரசன் படமெடுத்து இருப்பது போன்ற சிலைகளைப் பல இடங்களில் வடித்துள்ளனர். இந்த அமைப்பில் திகழும் நந்தியை நாக நந்தி என்பார்கள்.