பதிவு செய்த நாள்
20
செப்
2019
04:09
அதியமான்கோட்டை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், கொலு பொம்மை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும், நவராத்திரி பண்டிகை, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், கொலு பொம்மை, கார்த்திகை விளக்கு, விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் மண்பாண்ட தொழிலில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் முதல் இவர்கள், கொலு பொம்மைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கொலு பொம்மை விற்பனை அதிகரித்த போதும், கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அதியமான்கோட்டையை சேர்ந்த கொலு பொம்மை தயாரிக்கும் இந்துராணி, 55, கூறியதாவது: நவராத்திரி பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களில் கொலு வைக்க சமீப காலமாக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கொலு பொம்மைகள் செட் செய்ய, அதிக நாட்கள் தேவைப்படுகிறது. இவற்றை தயாரிக்க வேண்டிய மண், பெயின்ட் விலை மட்டுமின்றி, தொழிலாளர் கூலியும் உயர்ந்துள்ளது. கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்தும், போதிய விலை கிடைக்காமல் கொலு பொம்பை உற்பத்தியாளர் பாதிக்கப்படுகின்றனர். வரும் நாட்களில், கொலு பொம்மைகளுக்கு உரிய விலை கொடுத்து வாங்க முன்வந்தால் மட்டுமே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதியமான்கோட்டையில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளை, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, கர்நாடகாவிலிருந்து வந்தும் ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.