பதிவு செய்த நாள்
23
செப்
2019
05:09
பாரதிக்குப் பராசக்தி மேல் தான் எத்தனை பக்தி, எத்தனை நம்பிக்கை. இடையறாது அன்னைக்கு நன்றி செலுத்திக் கொண்டேயிருக்கிறார். நாமும் அவரைப் போல தினமும் ”கடவுளே! எனக்கு இந்த நல்ல வாழ்வைத் தந்தமைக்காக எந்நாளும் நான் கடமைப்பட்டிருக்கின்றேன்” என நன்றி சொல்ல வேண்டும். கடவுளின் புகழை பேசி கொண்டேயிருக்க வேண்டும். அப்பர் தேவாரப்பாடலில், ’பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’ என்கிறார்.
”நான் மட்டும் அங்கே பிறந்திருந்தால்... இங்கே பிறந்திருந்தால்...” என பலர் பேசுவதுண்டு. ஆனால் எங்கே நாம் பிறக்க வேண்டும் என்பது கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம். சாதாரணமாக ஜோதிடர்கள் நம்மிடம், ”உங்களுக்கு மட்டும் சுக்கிரன் 4ல் இருந்திருந்தால்...சூரியன் 10-ல் இருந்திருந்தால்...” என அடுக்கிக் கொண்டே போவார்கள். அது தான் இல்லையே... இப்போது இருப்பதற்கு பலன் சொல்லுங்கள் என்போம்.
எந்தக் கட்டத்தில் யார் இருக்க வேண்டும் என்பதை அவரவர் பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப கடவுளே நிர்ணயம் செய்கிறார். ஒருவருக்கு பெற்றோர், உடன்பிறப்பு, வசிப்பிடம், தொழில் என எல்லாம் தீர்மானிக்கப்பட்டவை. இதனை அவரவர் கர்மவினை எனச் சொல்வர். கடவுள் தீர்மானித்த இந்த வாழ்வை மகிழ்ச்சியுடன் ஏற்போம். இதை வெற்றி மிக்கதாக மாற்றுவது நம் கையில் உள்ளது. துாய எண்ணத்தின் மூலம் நல்லதை சிந்தித்தால் வாழ்வு மேம்படும். ’நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்கிறது உபநிடதம். எந்தச் சூழலில் வாழ்வு அமைந்தாலும் அதன் மூலம் வெற்றி காண்பவரே உயர்ந்தவர்கள்.
சிற்பி ஒருவர் சிலை செய்ய கல்லைத் தேர்ந்தெடுக்க மலைக்குப் புறப்பட்டார். நீண்டநேர தேடலுக்குப் பின் இரண்டு கற்களைத் தேர்வு செய்தார். ஒன்றை வழிபாட்டுக்குரிய கடவுளின் சிலையாக ஆக்கினார். மற்றொன்றை கோயிலின் வாசல்படியாக உருவாக்கினார். கடவுளின் சிலையை அனைவரும் வழிபட வாசல்படியோ அனைவராலும் மிதிக்கப்பட்டது. வாசல்படியாக கிடந்த கல் ஒருநாள், ”நாம் இருவரும் ஒரே மலையில் தானே பிறந்தோம்! உன்னை எல்லோரும் மதிக்கிறார்கள். என்னை மட்டும் மிதிக்கிறார்களே ஏன்?” என்று புலம்பியது. அப்போது புன்னகைத்த கடவுள், ”நீ ஏன் அந்தக் கோணத்தில் சிந்தித்து துன்பப்படுகிறாய்! பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் போதே உன்னைத் தொட்டு வணங்கிய பின்னரே என்னை தரிசிக்க வருவர். உன் மீது கால் வைக்கும் முன் பக்தியுடன் உன்னைத் தீண்டுவது புரியவில்லையா? நீயும் வழிபாட்டுக்குரியவன் தான். கோயில் படியாய் இருப்பதால் மதிக்கப்படுகிறாய்!” என்றது. அதன் பின் பக்தர்கள் கையால் தீண்டும் போது தன் பெருமையை உணர்ந்து கடவுளுக்கு நன்றி சொன்னது.
நேர்மறைச் சிந்தனையுடன் இருந்தால் நமக்கு வாழ்வின் பெருமை புரியும். அர்த்தம் விளங்கும். நம்மால் இயன்ற வரை மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டும். இன்று மற்றவருக்கு என்ன நன்மை செய்தோம் என உறங்கச் செல்லும் முன் சிந்திக்க வேண்டும்.
இது தான் படைப்பின் ரகசியம்.
இந்த உலகத்தில் நல்ல நோக்கத்திற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். ஒரு தேரின் எல்லாப் பகுதிகளுமே சேர்ந்து அழகாகி அது இயங்கிட உதவுகிறது. அச்சாணி சிறிது தானே... அது எதற்கு என யோசித்தால், தேர் எப்படி நகரும்? அது போலவே நாம் முக்கியமானவர் தான். முக்கிய செயலுக்காகவே படைக்கப்பட்டுள்ளோம். நமக்கு விதித்த கடமையை காலம் அறிந்து சிறப்பாக செய்வோம். உலகம் என்னும் தேர் சிறப்பாக வலம் வர துணை நிற்போம்.
ஆங்கொரு கல்லை வாயிலிற் படியென்
றமைத்தனன் சிற்பி, மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான் உலகினோர் தாய் நீ
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனஞ் சமைப்பாய்!
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்! என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே!