பரமக்குடி: பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தில் பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஆண்கள் முளைப்பாரி எடுத்து வினோத நேர்த்தி கடன் செலுத்தினர். பரமக்குடி அருகே தோளுரில் வாழ வந்தாள் அம்மன் கோயில் முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். பருவ மழை பெய்யவும், விவசாயம் செழித்து அதிக மகசூல் கிடைக்க வேண்டியும், உடல் ஆரோக்கியம் பெறவும் வேண்டி நேர்த்தி கடன்களை செலுத்தினர். முளைப்பாரி விழா பெரும்பாலும் பெண்கள் மட்டுமே எடுப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் ஆண்கள் கும்மி கொட்டியும், ஒயிலாட்டம் ஆடியும் முளைப்பாரி எடுப்பது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. கிராம தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ராகவன், பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.