பதிவு செய்த நாள்
26
செப்
2019
11:09
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், துர்கா பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி, 50 கிலோ தங்கத்தில், துர்க்கை சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆண்டு தோறும், துர்கா பூஜை கொண்டாட்டம், அக்டோபர் அல்லது நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். முக்கிய வீதிகளில், துர்கை சிலையை அமைத்து, அதற்கு வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு, துர்கா பூஜை கொண்டாட்டங்கள், அடுத்த மாதம், 4ல், துவங்கி, 10 நாட்களுக்கு நடக்கிறது. இந்நிலையில், கோல்கட்டாவில், சந்தோஷ் மித்ரா சதுக்கம் என்ற இடத்தில், 13 அடி உயரத்தில், பிரமாண்ட துர்கை சிலையை அமைக்க, விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து விழாக்குழு தலைவர் பிரதீப் கோஷ் கூறியதாவது:துர்கை சிலை, 50 கிலோ தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 20 கோடி ரூபாய். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. அடுத்த சில நாட்களில், இந்த சிலை, வழிபாட்டு பந்தலில் வைக்கப்படும். இதற்கு முன், யாரும், இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டது இல்லை. இதற்காக, வியாபார நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை வசூலித்துள்ளோம். சிலை கரைப்பு நிகழ்ச்சி முடிந்ததும், அதில் உள்ள தங்கத்தை திரும்ப எடுத்து, அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.