பதிவு செய்த நாள்
26
செப்
2019
12:09
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், சீரமைப்பு பணிகளில், தொல்லியல் துறையினர் முனைப்புக் காட்டி வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில், 1010ம் ஆண்டு, ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ‘யுனெஸ்கோ’ நிறுவனம், பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ள இக்கோவிலில், 1996ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அடுத்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளில், தொல்லியல் மற்றும் அறநிலையத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மராட்டா கோபுரம், கேரளாந்தகன், ராஜராஜன் கோபுரம், பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றில், பழமை மாறாமல், ‘ஹைட்ரோ போபிக்’ என்ற கலவை பூச்சு பணியில், தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் சேதமடைந்தவை குறித்து, தொல்லியல் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில் துாய்மைப்படுத்தும் பணிகளை, விரைவில் முடிக்க உள்ளோம். தற்போது, திருச்சுற்று மாளிகை துாய்மைப்படுத்தும் பணி, நடைபெற்று வருகிறது. மதில் மேல் உள்ள, 108 சிவலிங்கத்தில், சேதமடைந்த, 52 சிவலிங்கங்களை சீர் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்குமாறு, அறநிலையத்துறையினர் கேட்டுள்ளனர். பணிகள், விரைவாக நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.