பதிவு செய்த நாள்
27
செப்
2019
12:09
சென்னிமலை: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமாக, சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியில் மயில் நடமாட்டம் உள்ளது. மலைப்பகுதி சாலையில் நடந்தும், திடீரென மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் இருந்து பறந்தும், பக்தர்களக்கு தரிசனம் தந்து, பரவசப்படுத்துவது உண்டு. இதுகூட பலருக்கு கிடைக்காது; சிலருக்கு மட்டுமே கிடைக்கும். இந்நிலையில், நேற்று மலைக்கு, தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு, மயிலின் தரிசனம் மட்டுமின்றி, அற்புத நடனமும் கண்களுக்கு விருந்தாக, மனதுக்கு பரவசமாக அமைந்தது.
சென்னிமலையில், நேற்று காலை, 9:00 மணி வரை வெயிலை அனுமதிக்காமல், மேகமூட்டமாக மப்பும் மந்தாரமுமாக வானம் காணப்பட்டது. இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் உயிரினங்கள், ஏகாந்த அமைதியில், உற்சாகத்தில் திளைத்திருந்தன. இந்நிலையில் திடீரென மலைப்பாதை வழியில், ஒரு ஆண் மயில் வந்தது. யாருக்கோ எதுவோ தகவல் தருவதுபோல், கூக்குரலில் அகவலை எழுப்பி, தோகை விரித்து நடனமாட தொடங்கியது. அப்போது மலைப்பாதை வழியாக சென்ற சில பக்தர்கள், மயிலின் நடனத்தை பார்க்க, வாகனங்களை, டூவீலர்களை ஓரம் கட்டி நிறுத்தினர். எந்த சஞ்சலமுமின்றி பத்து நிமிடங்களுக்கு ஆடிக் களைத்த மயில், வந்த வழியே சென்று மறைந்தது. நடனத்தை பார்த்த பலர், மயிலை வணங்கி வழிபட்டனர். கந்த சஷ்டி கவசத்தில் மையல் நடனஞ் செய்யும் மயில் வாகனனார் என்ற வரி உள்ளது. அந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், சஷ்டி கவசம் அரங்கேறிய அதே மலையில், மயிலின் நடனத்தை பார்த்த பாக்கியத்தை நினைத்து, மெய் மறந்து பக்தர்கள் நகரத் தொடங்கினர்.