பதிவு செய்த நாள்
30
செப்
2019
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவில், பாரசக்தியம்மன் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று, நவராத்திரி விழா தொடங்கியது. இதில், நேற்று அம்மன் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பராசக்தி அம்மன் அலங்காரத்தில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து ராஜராஜேஸ்வரி, கெஜலட்சுமி, மனோன்மணி, ரிஷப வாகனம், ஆண்டாள், சரஸ்வதி, லிங்கபூஜை, மகிஷாசூரமர்த்தினி, சந்தனக்காப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலிப்பார். விஜயதசமி நாளான, 8ல், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. இதேபோன்று யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், நேற்று, சாரதா மட தலைவர் கிருஷ்ண பிரயாம்பா உரையுடன் நவராத்திரி விழா தொடங்கியது. இதில், 1,000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில், வைத்து பூஜை நடந்தது. இதில், ஆதிசங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பெரியவர், யோகி ராம்சுரத்குமார் உள்பட பல்வேறு மகான்களின் பொம்மைகள், லட்சுமி, சரஸ்வதி, துர்காதேவி, கெஜலட்சுமி உள்ளிட்ட அம்மன் பொம்மைகள், கிருஷ்ணர், சிவன், சிபி சக்கரவர்த்தியின் கதையை விளக்கு காட்சி, திருவண்ணாமலை மலை மற்றும் ஆன்மிக தலங்களை குறிக்கும் வகையில் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர் ஜஸ்டீஸ் அருணாச்சலம் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.