பதிவு செய்த நாள்
30
செப்
2019
11:09
துாத்துக்குடி: குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மகிஷா சூரசம்ஹாரம், அக்., 8ல் நடக்கிறது.மைசூருக்கு அடுத்தபடியாக, துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப் பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஞானமூர்த்தீஸ்வரர் - முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, யானை மீது கொடி பட்டம் வீதி உலா நடந்தது.காலை, 8:30 மணிக்கு, அம்மன் சன்னிதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார் குமார் பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, காப்பு கட்டி விரதம் துவங்கினர். இரவு, 10:00 மணிக்கு துர்க்கை அம்மன் கோலத்தில், முத்தாரம்மன் வீதி உலா நடந்தது.விழா நாட்களில், தினமும் காலை முதல் இரவு வரை, முத்தாரம்மனுக்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம், அலங்காரம் நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக, அக்., 8ல், கோவில் கடற்கரையில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.