பதிவு செய்த நாள்
01
அக்
2019
04:10
“பேயாய் உழலும் சிறுமனமே
பேணாய் என் சொல் இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானே காண்”
இன்றைய வாழ்வு பற்றி சிந்தியுங்கள். மனம் எங்கு செல்கிறதோ அதைத் தேடி நாம் ஓடுகிறோம். குழந்தையாக இருந்த போது விளையாட்டைத் தேடி ஓடினோம். பள்ளி, கல்லூரியில் படிப்பு, பட்டத்தை தேடி ஓடினோம். திருமணம் ஆன பின் கடமை துரத்த பணத்தை நோக்கி ஓடினோம். பிறகு முதுமையில் நோயில் இருந்து விடுபட ஓடுகிறோம். இந்த ஓட்டம் எப்போது தான் நிற்கும்? ஒரு நாளும் நிற்காது. இது ரஜோ குணத்தின் வெளிப்பாடு! ஒன்றை அடைய வேண்டுமெனில் எதைச் செய்ய வேண்டும் என திட்டமிடச் செய்வது ரஜோ குணம் தான். என் குறிக்கோள் என்ன, அதை அடைய என்ன செய்ய வேண்டும், என்னுடைய துறையில் வேறு யார் இருக்கிறார்கள், என் போட்டியாளர் யார் என்றெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இதன் காரணமாக காமம், கோபம் போன்ற சக்திகளால் நாம் உந்தப்படுகிறோம். ’நான் தான்’ ’எனக்கு தான்’ ’எனக்கே இது சொந்தம்’ ’இதை அடைந்தே தீருவேன்’ என்று வேகத்தைக் கொடுப்பது ரஜோ குணம் தான். இதுவே மற்றவரோடு ஒப்பிட வைக்கிறது. குறிக்கோளை அடைய முடியாவிட்டால் தடையாக இருப்பவர் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது.. நம்மை விட மேலே இருப்பவர் மீது பொறாமையை உருவாக்குகிறது. தகுதிக்கு மீறி ஆசைப்பட வைப்பதும் இது தான்.
இந்நிலையில் மனம் குழம்புகிறது. இதனால் தான் பாரதியார் ’பேயாய் உழலும் சிறு மனமே’ எனக் குறிப்பிடுகிறார். விழித்தெழுந்த மனதிற்கு மட்டுமே மனதின் செயல்பாடு பற்றி புரியும். இந்த நேரம், இந்த இடத்தில் இந்த மனநிலை தான் ஏற்றது என சரியாக சிந்திக்க வைக்கும். இதை பெரியவர்கள் ’இடம் பொருள் ஏவல் பார்த்து நடக்கும் தன்மை’ என்பர். வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவமும் மனதை விழித்தெழச் செய்கிறது. குருேக்ஷத்திர போரில் அர்ஜூனனின் நிலையைப் பாருங்கள். எதிர்த்து நிற்பவர்கள் கவுரவர்கள். அர்ஜூனனோ க்ஷத்திரியன். அவனுக்குரிய தர்மம் பகைவரைக் கொன்று வெற்றி பெறுவதே. ஆனால் அவன் போரிட முடியாமல் வில்லையும், அம்பையும் நழுவ விட்டான். “என்ன செய்யப் போகிறாய்?” எனக் கேட்டார் கிருஷ்ணர்.
“காட்டிற்கு போய் யோகியாக வாழ்வேன்! எனக்கு போரும் வேண்டாம்; நாடும் வேண்டாம்” என்றான்.
“அப்படியானால் பாஞ்சாலியை மானபங்கம் செய்த போது கவுரவர்களைக் கொல்வேன், அதிலும் கர்ணனை என் அம்பால் துளைப்பேன் என்றாயே...ஏன்?” எனக் கேட்டார்
“ஏன் என்றே தெரியவில்லை கிருஷ்ணா! குழப்பத்திற்கான காரணத்தை சொல்” எனக் கேட்டான் அர்ஜூனன்.
அப்போது சாத்வீக, ராஜஸ, தாமஸ குணங்களின் தன்மை பற்றியும், அவை மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கடமைகளைச் செய்யத் தடையாக நிற்கிறது என்பதை கிருஷ்ணர் விளக்கினார்.
கிருஷ்ணரின் மனம் விழித்தெழுந்த மனம். அர்ஜூனனின் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது பற்றி அவருக்குத் தெரியும். எனவே அர்ஜூனன் மனதை மட்டும் இல்லாமல் நம் அனைவரின் மனதையும் விழித்தெழச் செய்ய பகவத்கீதையை உபதேசித்தார்.
“அர்ஜுனா! க்ஷத்ரியனான உனக்கு என ஒரு தர்மம் உண்டு. அதன் காரணமாக நீ போர் செய்தாக வேண்டும். பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது உன் இயல்பான ராஜஸ குணம் மேலோங்கவே ’கர்ணனைக் கொல்வேன்’ என சபதம் செய்தாய். ஆனால் இப்போதோ உன் குருநாதர், சகோதரர்களை போர்க்களத்தில் கண்டதும் சாத்வீக குணம் மேலோங்கியது. வில்லை நழுவ விட்டு யோகியாக வாழ்வேன் எனச் சொல்கிறாய். எல்லா மனிதர்களிலும் இயற்கையாக உள்ள மூன்று குணங்கள் (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) உன்னிடமும் இருப்பதால் தான் மனம் குழம்புகிறது. இந்த இடத்தில் உன் தகுதிக்கு ஏற்ற குணம் ராஜஸம் தான். எனவே விழித்தெழு” என்றார் கிருஷ்ணர். நம் மனதைக் கட்டுப்படுத்தி தர்ம வழியில் வழி நடத்தும் வாழ்க்கை பாடம் இதிகாசங்கள் என்பதை உணர வேண்டும். நான் யார், சமுதாயத்தில் என் பங்கு என்ன, வாழ்வில் சாதிக்க எந்த குணங்கள் இருக்க வேண்டும் என்ற தெளிவு நமக்குள் இருக்க வேண்டும்.
சரி... குறிக்கோளை அடைய நான் உழைத்தாக வேண்டும். சில செயல்களைச் செய்தே ஆக வேண்டும், அதைச் செய்வதால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும். எனது வெற்றியில் மற்றவரின் தோல்வியும் இருக்கிறது, இது ராஜஸ குணத்தின் வெளிப்பாடு என்றால் இது சமுதாயத்திற்கு நல்லதா என்ற கேள்விகள்
மனதில் எழலாம். ஒரு பொருளை அடைய நீங்கள் ஆசைப்படலாம், ஆனால் ’எல்லாம் எனக்கே வேண்டும்’ என நினைப்பது கூடாது. இது ராஜஸ ஆசை. கவுரவர்களின் ஆசை ராஜஸ ஆசை. ’எங்களுக்குச் சேர வேண்டிய பங்கைப் கொடுங்கள்’ என பாண்டவர்கள் கேட்டது சாத்வீக ஆசை. நீ வாழ பிறரைக் கெடுக்காதே என கேள்விப்பட்டிருப்பீர்கள். அது கவுரவர்களுக்கு பொருந்தும்.
மற்றவரிடம் உள்ள வசதி நம்மிடம் இல்லை என்ற நிலையிலும், எப்படி உழைத்தால் குறிக்கோளை அடையலாம் என யோசித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள். வெற்றி பெற்றவர்களை உதாரணமாகக் கொண்டு செயல்படுவது நல்ல அணுகுமுறை. ஆனால் மற்றவர்கள் முன்னேறுகிறார்களே, நான் மட்டும் முன்னேறவில்லையே, அவர்களைத் தடுக்க சூழ்ச்சி செய்ய திட்டமிட்டால் அது பொறாமையின் வெளிப்பாடு.
சிலருக்கு கோபம் வரலாம். அது இயல்பு என்றாலும் மற்றவர்களுக்கு துன்பம், அழிவை ஏற்படுத்தினால் அதுவே ராஜஸ குணத்தின் வெளிப்பாடு.
பல நிறங்கள் இருப்பதால் தான் வானவில் அழகாக உள்ளது. பல சுவை சேர்ந்தால் தான் உணவை நம்மால் சுவைக்க முடிகிறது. அதே போல மூன்று குணங்கள் நம்மிடம் உள்ளன. அறுசுவையில் ஒரு சுவை மட்டும் மேலோங்கி இருந்தால் உணவு சுவைக்குமா? உப்பில்லா பண்டம் குப்பையில் என்பார்கள்? ஆனால் உப்பு மட்டும் இருந்தால் போதுமா? முதலில் எந்த குணத்தால் நாம் உந்தப்படுகிறோம், அதன் விளைவு என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.
சரி... வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தும், சில நேரத்தில் சோம்பலாக இருக்கிறோமே? அளவுக்கும் அதிகமாக துாக்கம் வருகிறதே...ஏன்? இதுவே தாமஸ குணத்தின் வெளிப்பாடு. இது பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.