பதிவு செய்த நாள்
08
அக்
2019
02:10
திருப்பரங்குன்றம்: மூன்று பக்கம் வயல்வெளி... ஊருக்கு அடையாளமாக இருக்கும் கண்மாய் என ரம்மியமாக காட்சி தருகிறது ’பொம்மை கிராமம்’ என்றழைக்கப்படும் மதுரை விளாச் சேரி.
இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாக பல தலைமுறைகளாக பொம்மைகள் தயாரித்து வருகின்றனர். தமிழ் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் களிமண், காகித கூழ் போன்றவற்றால் சீசனுக்கு ஏற்றாற்போல் 3 இன்ச் முதல் 15 அடி உயரம் வரை சுவாமி சிலைகள், கொலு பொம்மைகள், மெகா விநாயகர் சிலைகள், அகல் விளங்குகள், அரசியல் தலைவர்கள் சிலைகள், கிறிஸ்துவ குடில்கள், அலங்கார மொம்மை கள் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கின்றன.
விநாயகர் சதுர்த்திக்காக 15 அடி உயரம் வரை களிமண்ணில் சிலைகள் தயாரிப்பது இங்கு ஸ்பெஷல். இரண்டு அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சிலைகளுக்கு களிமண்ணுடன் ஆற்று மணல் சேர்த்தும், அதற்கும் உயரமான சிலைகள் தயாரிக்கும் போது யானை சாணம் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை காக்க சிலைகளுக்கு வாட்டர் பெயின்ட் அடிக்கின்றனர்.
மெகா விளக்குகள் ‘தென்திருப்பதி’ என்றழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும் 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 9 மெகா களிமண் அகல் விளக்குகளும்.
மற்றும் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3 ஆயிரம் விளக்குகளும் திருவண்ணாமலை தீபத்திற்காக இங்கு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிலர் இயற்கையை பாதுகாக்கும் வகையில் சிலைகளுக்குள் விதைகள் வைத்து தயாரிக்க செய்து இலவசமாக வழங்குகின்றனர்.
பல தலைமுறைகளாக மதுரை மண்ணின் பெருமையை பொம்மைகள் மூலம் காத்து வரும் இக்கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.