பதிவு செய்த நாள்
08
அக்
2019
04:10
மகிஷாசுரனை அம்பிகை வென்றநாள் விஜயதசமி. இன்று அம்மனின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டைப் படித்தால் நினைத்தது நிறைவேறும்.
* உலகாளும் நாயகியே!
ஆனைமுகத்தானின் அன்னையே!
வேதம் போற்றும் வித்தகியே!
ஞானச்சுடர்க்கொடியே!
மரகதமயிலே! குளிர்ந்த நிலவாக
பிரகாசிப்பவளே! கருணை
மழையைப் பொழிபவளே!
ஈசனின் திருக்கரம் பிடித்தவளே!
வெற்றித் திருநாளான விஜயதசமி
நன்னாளான இன்று எங்களின்
முயற்சிகளில் வெற்றியைத்
தந்தருள வேண்டும்.
* மங்களம் நிறைந்தவளே!
கற்பகம் போல் வாரி
வழங்கும் ஈஸ்வரியே!
பர்வத ராஜனின் மகளே!
அபிராம வல்லியே!
ஆனந்தம் அளிப்பவளே!
ஆதிபராசக்தியே! அங்கயற்கண்ணியே!
திருமாலின் சகோதரியே!
மலர் அம்பும், கரும்பு வில்லும் தாங்கியவளே!
ஈசனின் இடப்பாகத்தில் உறைபவளே!
எங்களின் குடும்பத்தில்
சுபிட்சத்தை அளித்தருள வேண்டும்.
* நாராயணியே! சாம்பவியே!
சங்கரியே! சியாமளையே!
மாலினியே! திரிசூலம் ஏந்திய
சூலினியே! புவனேஸ்வரியே!
மதங்க முனிவரின் மகளே!
பிரபஞ்சத்தைப் படைத்துக் காப்பவளே!
வேதம் போற்றும் வித்தகியே!
வீரத்தின் இருப்பிடமே!
எங்களின் மீது உன்
கடைக்கண்களை காட்டியருள்வாயாக.
* மதுரையில் வாழும் மீனாட்சியே!
காஞ்சியை ஆளும் காமாட்சியே!
காசியில் உறையும் விசாலாட்சியே!
மலையரசனின் புத்திரியே!
மகிஷாசுரனை வதம் செய்து
தர்மத்தை நிலைநாட்டியவளே!
திக்கற்றவருக்கு துணையாக வருபவளே!
வெற்றியருளும் விஜய துர்கையே!
உலக உயிர்கள் எல்லாம்
நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.