பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவதார தத்துவத்தை எடுத்துக்கூறிய பிறகு, முக்கியமான ஒரு கருத்தைக் கூறுகிறார். அர்ஜுனா! எவர்கள் என்னை எவ்வாறு சரணடைந்து வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் வேண்டியவாறே அருளுகிறேன். மக்கள் எப்படியாயினும் எல்லா வகையிலும் என்னுடைய வழியையே கடைப்பிடிக்கின்றனர்.”
பிரார்த்தனை செய்வதைப் பற்றி மக்களுக்குப் பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கின்றன. இறைவனிடம் சிலவற்றை கேட்கலாமா கூடாதா என்ற குழப்பம் இருக்கிறது. வழிபாட்டில் பிரார்த்தனை முக்கிய அங்கம் வகிக்கிறது. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி, விழுந்து வணங்கி, அறத்துக்கு முரண்படாத வேண்டுதல்களை அவரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அறிவுநலம் ,மனநலம், சொல்நலம், செயல்நலம், உடல்நலம், உறவு நலம்,பொருள்நலம் ஆகிய அனைத்து நலங்களையும் வேண்டி, வேதங்கள் முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள் நிறைந்திருக்கின்றன. அறியாமை, ஐயம், திரிபு ஆகியவற்றை நீக்கவல்ல நல்லெண்ணங்கள் நாலா பக்கங்களிலிருந்தும் நம்மை நோக்கி வரட்டும், முறையான வாழ்வைப் பின்பற்றுபவர்களை விட்டு நீங்காத தேவர்கள், நம் அனைவருக்கும் இடைவிடாத இன்பத்தைப் பெருகச் செய்து நம்மைப் பாதுகாப்பவர்களாக விளங்கட்டும் என்பது ஓர் அழகான வேதமந்திரப் பிரார்த்தனை.
வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈவான் கண்டாய் என்று பாடினார் அப்பர் பெருமான். இறைவன் நம்மிடம் பொருளைக் கேட்டால் பொருளைக் கொடுப்பார். இன்பத்தைக் கேட்டால் இன்பத்தைக் கொடுப்பார். புண்ணியத்தைக் கேட்டால் புண்ணியத்தைக் கொடுப்பார். மோட்சத்தைக் கேட்டால் மோட்சத்தைக் கொடுப்பார். அறம் , பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருட்களில் யார் எதைக் கேட்கிறார்களோ, அவரவர்களுக்கு அவற்றை அருளுகிறார். நிழல் வேண்டுமென்றால் நாம் தான் மரத்தினருகில் செல்ல வேண்டும். குளிர்காய வேண்டுமென்றால் நாம்தான் நெருப்பின் அருகில் செல்ல வேண்டும். அதுபோல கடவுளின் அருள் வேண்டுமானால் , நாம் தான் அவரிடம் சென்று கேட்க வேண்டும். சிலர் அகங்காரத்தினால், தனக்கு என்ன வேண்டும் என்று கடவுளிடம் கேட்க மாட்டேன்; தனக்குத் தேவையானதை அவராக அருளட்டும் என்று சொல்கிறார்கள். கேட்டால் குறைந்து போய்விட மாட்டோம் . பிரார்த்தனை செய்வதில் தவவேறதும் இல்லை. மகாகவி பாரதியாரின் அற்புதமான பிரார்த்தனைகளுள், ‘ எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி ’ என்பதும் ஒன்று. பிரார்த்தனை செய்தால்தான் பலன் கிடைக்கும். பிரார்த்தனை செய்யச் செய்ய நம்முள் இருக்கும் பேராற்றலை நாம் உணருகிறோம்.
எதை வேண்டும் என்று கேட்கிறோமோ, அதனை நமக்குள்ளிருந்து வெளிக்கொணரும் சக்தி பிரார்த்தனைக்கு இருக்கிறது. இறைவன் அருள்புரிவதற்குத் தயாராக இருக்கிறார். அருள்புரிவது அவரது தொழில், நாம் அவரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். பொறுமையாக் காத்திருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் பொறுமையை இழந்துவிடக்கூடாது. பக்தியை விட்டுவிடக்கூடாது. நான் செய்வதைச் செய்கிறேன், கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். வேண்டியது கிடைக்காமல் போனால், இறைவன் என்ன கல்லா என்றெல்லாம் கேட்கக்கூடாது. பிரார்த்தனை என்பது அவரவர் மனநிலைக்கேற்ப, தேவைக்கேற்ப அவரவர் செய்ய வேண்டிய ஒன்றாகும். பிரார்த்தனையில் போலித்தனம் கலந்துவிடக்கூடாது, அதில் உண்மை இருக்க வேண்டும். பிரார்த்தனையைக் கடந்து போக வேண்டும் என்ற பிரார்த்தனையும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆன்மிக வாழ்வில், ஒவ்வொருவரும் தத்தமது பக்குவத்திற்கேற்ப பல்வேறு நிலைகளில் இருக்கிறார்கள். எல்லோரும் எப்படியோ தன் வழியில் தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார் பகவான். அவர்கள் ஒரு நாளைக்கு அடையவேண்டியதை அடைந்துவிடுவார்கள்; தன் வழியில் வருபவர்களுக்கு தான் மனப்பக்குவத்தை அருளுவதாகக் கூறுகிறார்.எப்படியாயினும் ஆன்மிக வாழ்க்கையில் இருப்பவர்கள் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்துவிடுவார்கள் என்பது கருத்து. மக்களின் மனப்பக்குவத்திற்கேற்ப பிரார்த்தனைகளின் தரம் மாறுகின்றன. பணமும், புலனின்பங்களும், உறவுகளும் நிலைத்த நிம்மதியைத் தரப்போவதாக எண்ணி, பலர் அவற்றை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவற்றால் நிம்மதி ஏற்படப்போவதில்லை என்று உணர்ந்த பிறகு, பிரார்த்தனையின் தரம் உயருகிறது.
உள்ளம் பக்குவமடைந்த பிறகு உணர்ச்சிப்பூர்வமான பிரார்த்தனைகள் அறிவுபூர்வமான பிரார்த்தனைகளாக மாறுகின்றன. இறைவனிடம் உள்ளம் உருகி பிரார்த்தனை செய்வதால், மனதில் விருப்பு வெறுப்புகள் குறைந்து, மன மாசுக்கள் யாவும் நீங்குகின்றன. உள்ளம் அமைதி பெறுகிறது; உள்ளத்தில் பணிவு ஏற்படுகிறது; இறைநம்பிக்கை ஓங்குகிறது. பிரார்த்தனையினால், நல்லெண்ணங்கள் நாளுக்கு நாள் உறுதி பெறுகின்றன; உள்ளம் பக்குவம் பெறுகிறது; உள்ளத்தில் அருள்நாட்டம் மேலோங்குகிறது. மெய்யறிவைப் பெறுவதற்காக தகுதிகள் ஏற்படுகின்றன; இறைவனே குருநாதர் வடிவில் தோன்றுகிறார்; குருவின் திருவடி நிழலில் மெய்ப்பொருள் தத்துவ நூல்களைக் கற்று மெய்யறிவைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. மெய்யறிவைப் பெற்று அதில் நிலைத்திருப்பவன், பேரானந்தமான பரம் பொருளாகவே தன்னை உணர்ந்து, பிரர்த்தனைகளைக் கடந்து செல்கிறான்.