பதிவு செய்த நாள்
09
அக்
2019
04:10
ஒருசமயம் சுந்தரர், தனது நண்பர் சேரமானை சந்திக்கச் சென்றார். அவர் சுந்தரருக்கு சில பரிசுகளை கொடுத்தார். அப்பொருள்களுடன் சுந்தரர் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் திருவிளையாடல் புரிய எண்ணிய சிவன், பூதகணங்களை அனுப்பி அவரிடமிருந்த பொருட்களை கவர்ந்தார். கலங்கிய சுந்தரர் அங்கிருந்த விநாயகரிடம் முறையிட்டார். அவர் சுந்தரரிடம், இது தனது தந்தையின் லீலை என்று சொல்லியதோடு, அவர் மறைந்திருந்த இடத்தையும் காட்டினார்.
அதன்படி சிவன் மறைந்த இடத்திற்கு சென்ற சுந்தரர், ஒரு பதிகம் பாடினார். அந்தப் பாடல்கள் சிவனைத் திட்டுவது போல் அமைந்தன. உடனே, சிவன் அவருக்கு காட்சி தந்து, பொருட்களை திருப்பிக் கொடுத்தார். இந்த நிகழ்வு திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி தலத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் இக்கோயிலில் சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்தது, அதனை மீட்க சிவனிடம் முறையிட்டது, பொருட்களை மீட்டதும் மகிழ்ந்தது என மூன்று விதமான முகபாவனைகளுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள சிவனை, முருகன் வணங்கியதால், ‘திருமுருகநாதர்’ எனப்படுகிறார். பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள், அது திரும்பக் கிடைக்க இங்குள்ள சிவனிடம் வேண்டுகின்றனர்.