பதிவு செய்த நாள்
15
அக்
2019
02:10
நெகமம் பகுதியில், 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்களில், முக்கியமானது ஸ்ரீதேவி பூதேவி தாயார் ஸ்ரீஎம்பெருமாள் திருக்கோவில். நந்தவனத்துக்கு நடுவே, கம்பீரமாக காட்சி அளித்த கோவில், கருவரையில் நான்கரை அடி உயரத்தில், தேவிகளுடன் எம்பெருமாள் காட்சி அளிப்பதும், கோவில் வளாகத்தில், நவகிரகங்கள் இருப்பதும் இக்கோவிலுக்கு சிறப்பு.
கோவில் வளாகத்தில், 21 அடி உயர கருடகம்பம் அமைந்துள்ளது. கோவில் மட்டுமன்றி கோபுரமும், முன்மண்டபம், துாண்கள், கருங்கற்களால் அமைந்துள்ளது.கோவில் வளாகத்தில், சக்கரத்தாழ்வார், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், ராமஜெயம், கருடாழ்வார் சன்னதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருமண தடங்கல், தொழில், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நோய் தீர்க்க எம்பெருமாளை வழிபடுகின்றனர்.கோவிலில், 1938ல் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், சிறப்பு பூஜைகள், அமாவாசை வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ஜோதி வழிபாடு, அனுமன் ஜெயந்தி, துர்காஷ்டமி, கோகுலாஷ்டமி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் வழிபாடு நடக்கிறது. புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.