பதிவு செய்த நாள்
16
அக்
2019
11:10
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் வந்த வீரராகவப் பெருமாள், மீண்டும் திருவள்ளூர் சென்றடைந்தார். ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் கோவில் குளக்கரையில், வேதாந்த தேசிகனின் கோவில் உள்ளது. இங்கு, வேதாந்த தேசிகனின், 751ம் ஆண்டு உற்சவ விழா, 8ம் தேதி துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதுாருக்கு வருகை தந்தார்.முன்னதாக, ஊர் எல்லையில் வேதாந்த தேசிகன் எழுந்தருளி, வீரராகவப் பெருமாளை, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.
அதன் பின், ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில், புறப்பாடு நடைபெற்றது. பின், ஸ்ரீபெரும்புதுார் அஹோபில மடத்திற்கு, வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார்.அங்கு, பக்தர்களின் பொது தரிசனம் முடிந்த பின், காலை, 9:30 மணிக்கு, மாட வீதிகளில் திருவாபரண திருமேனியுடன், வேத பாராயண மற்றும் தேசிக ஸ்தோத்திரங்கள் பாராயணங்களுடன் புறப்பட்ட வேதாந்த தேசிகன், கோவிலை சென்றடைந்தார். அங்கு, மதியம், 1:00 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு விசஷே திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, 7:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறையும், இரவு, 9:30 மணிக்கு பெரிய மாட வீதிகளில் புறப்பாடும் நடைபெற்றது.நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, திருவாய் மொழி சாற்றுமறை நடைபெற்றது. பின் 4:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து புறப்பட்ட வீரராகவப் பெருமாள், திருவள்ளூர் புறப்பட்டு, நேற்று காலை, மீண்டும் கோவிலை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர்.