குரு (பிரஹஸ்பதி) என்பவர், வடக்குத் திசை பார்த்தபடி நமக்குக் காட்சி தருபவர். குரு தட்சிணாமூர்த்தி, தென் திசை பார்த்தபடி அருளுபவர்; தேவர்களின் தலைவனாக திகழ்பவர்; குருவுக்கும் குருவானவர்! குரு பகவான் (பிரஹஸ்பதி) மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர் என்கின்ற புராணங்கள். குரு தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு பேசாமல் மவுனமாக இருந்தே பேருண்மையை உபதேசித்து அருளினார் என்கின்றன புராணங்கள்!
பிரகஸ்பதியை பூசநட்சத்திரத்தில் அவதரித்தவர் எனப் போற்றி வணங்குகிறோம். ஆனால், தட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே வழிபடுகிறோம். யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோத என்கிறார் பதஞ்சலி முனிவர். அதாவது, மனிதனுக்கு யோகம் ஸித்திக்கவேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மவுனத்தைப் பழக வேண்டும் என்கிறார். ஆனால், இந்த உலகில், சாதாரணர்களாகிய நாம், எதையுமே பேசித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில்.... பேசும் குருவை வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்து, மவுன குருவை, தட்சிணாமூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்!