ஓம் எனும் ஓங்கார எழுத்தின் தனித்தமிழ் வடிவம், ஏறத்தாழ யானை முகத்தின் வடிவம் போலக் காணப்படும். ஓங்கார ஒலியைக் காதால் கேட்கலாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்குப் புலனாவது விந்து, நாத தத்துவத்தை வரி(கோடு) போலவும் விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இரண்டும் சேர்ந்ததே, உ என்கிற பிள்ளையார் சுழி ஆகும். நாதமும் விந்துவும் ஒன்றுக்கொன்று துணை (சான்று) நிற்க வேண்டும். இதில், சான்று எனும் பதத்தைக் கரி என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய சுழி வடிவமும், சிவசக்தி சான்றாகிய கரி வடிவமும் கொண்டு நிற்கும்போது, கணபதியின் வடிவாகிய ஓங்காரம் தோன்றும். எனவேதான், ஏதேனும் எழுதத் தொடங்கு முன், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத் துக்கும் ஒலி வடிவமும் வரி வடிவமும் உண்டு. வரி வடிவாக விநாயகரின் திருவுருவும், ஒலி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.