தேவார திருத்தலங்களில் - சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள 34-வது சிவத்தலமாகப் போற்றப்படுவது திருக்கடம்பூர். தற்போது மேலக்கடம்பூர் என வழங்க ப்படுகிறது. இவ்வூர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ளது. தமிழக சிவன்கோயில்கள் ஒன்பது வகைப்படும் அவற்றில், கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையைச் சார்ந்தது. கருவறையே தேர் அமைப்பில் திகழும் கோயில், அதாவது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய குதிரைகள் பூட்டபெற்ற நிலையில் தேர் வடிவிலான கட்டுமானம் கொண்டது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்டுள்ளனர்.