பாபநாசம்: பாபநாசம் 108 சிவாலயம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள வீரமகா காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக கடந்த நான்கு நாட்களாக 15 சிவச்சாரியார்கள் நான்கு கால யாகசாலை பூஜைகளை நடத்தி நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் மேளதாளத்துடன் கடம் எடுத்துச் சென்று விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு வீரமகாகாளிக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. பின்னர் கரகம் காவடி மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் இன்று நடைபெற உள்ள திரு நடன திருவிழாவிற்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று இரவு துர்க்கையம்மன் எல்லை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று வீரமகாகாளியம்மன் படுகளம் பார்த்து வீதியுலா வருதல் திருநடன திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மஹாகும்பாபிஷேக விழாவில் பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு, டவுன் பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி மற்றும் திரளான பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.