தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேருக்காக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், 7 அரை டன் தென்னை நாரில், தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட வடங்கள் நேற்று, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான சாரங்கபாணி சாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்ற இந்த தேருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் புதிய வடங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6 லட்சம் மதிப்பில் 1 அடி சுற்றளவில், 100 மீட்டர் நீளம் உடைய 2 வடங்களும், 18 அங்குலம் சுற்றளவுடன் 175 அடி நீளம் கொண்ட 2 வடங்களும் என மொத்தம் 4 பிரம்மாண்ட வடங்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள கயிறு உற்பத்தியாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. சுமார் ஏழரை டன் தென்னை நார் கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு உருவாக்கப்பட்ட இந்த வடங்கள் நேற்று லாரி மூலம், சாரங்கபாணி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய தேர் வடங்களை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர். வருகிற 2020ம் ஆண்டு நடைபெற உள்ள சித்திரை தேர் திருவிழாவில் இந்த வடங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.