சிதம்பரம்: ஐப்பசி பூரம் சலங்கை உற்சவத்தையொட்டி, சிவகாமசுந்தரி அம்மன் திருத்தேரோட்டம் சிதம்பரத்தில் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில், சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் சலங்கை உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி தினம் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. மூன்றாம் நாள் உற்வமான நேற்று அம்மன் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி காலை சிவாகமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் திருத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தேர் நான்கு வீதிகள் வலம் வந்து நிலைக்கு வந்தது. மாலை அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. இன்று (24ம் தேதி) ஐப்பசி பூர சலங்கை உற்சவம், 25ம் தேதி மாலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உற்சவத்தை தொடர்ந்து கந்த சஷ்டி உற்சவம் ஆறு நாட்கள் நடக்கிறது.