பதிவு செய்த நாள்
24
அக்
2019
11:10
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் தேர் கூண்டு அமைக்க, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், கூண்டு அமைக்கப்படவில்லை. இதனால், பழமையான தேர், மழையில் நனைந்து வீணாகிறது.
ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமானஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பழமையான தேரில் தான், ஆண்டுதோறும் நடக்கும், ராமானுஜர் அவதார உற்சவ விழாவில், ராமானுஜர் தேரில் செல்வார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி சாலை விரிவாக்கப்பணியின்போது, தேரின் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்ட தேர் கூண்டு அகற்றப்பட்டது. இதையடுத்து, 25 லட்சம் ரூபாயில், நவீன தேர் கூண்டு அமைக்க, ஹிந்து அறநிலைய துறை நிதி ஒதுக்கியது. ஆனால், இதுவரை கூண்டு அமைக்கப்படவில்லை. இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: கூண்டு இல்லாததால், மூன்று ஆண்டுகளாக, மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் தேர் வீணாகிறது. தேர் கூண்டு அமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கி, கிடப்பில் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், கூண்டு அமைத்திருக்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், மழையில் நனைந்து, தேர் பலவீனமாகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர். கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி கூறுகையில், ‘‘தேருக்கு, ரெடிமேட் கூண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்து, இந்த வார இறுதிக்குள், கூண்டு அமைக்கப்படும்,’’ என்றார்.