வேலூர்: வேலூர் அகழியில், பழங்கால சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வேலூர் கோட்டை அகழி, 10 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக நான்கு ராட்சத மிதவை இயந்திரங்களில், ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோட்டையின் தெற்கு பகுதி அகழியில் கடந்த வாரம், தண்ணீருக்கு அடியில் நீளமான பழங்கால தடுப்பு சுவர் சேற்றில் புதையுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வேலூர் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோட்டை அகழி தூர்வாரப்படும்போது, கோட்டைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுச்சுவருக்கு, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. தூர் வாரும் போது, சிலைகள், கல்வெட்டுக்கள், புதையல் கிடைக்க வாய்ப்புள்ளன. கோட்டை தெற்கு வாசலுக்கு செல்லும் பகுதியில் நீளமான சுண்ணாம்பிலான தடுப்பு சுவர் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சுவர் எதற்காக அமைக்கப்பட்டது என்பது குறித்து. ஆய்வுகள் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.