சபரிமலை: சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இனி மண்டல கால பூஜைக்காக நவ., 16 மாலையில் நடை திறக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் பிறந்த நாளில் சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கணபதிஹோமமும் வழக்கமான பூஜைகளும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெற்றது. 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இனி மண்டலகால பூஜைக்காக நவ., 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். 17-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். டிச., 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.